டாக்டர் பட்டம் பெற்ற விஐடி வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா

By Karthikraja Jun 26, 2024 01:47 PM GMT
Report

அமெரிக்கா நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற விஐடி வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.

முனைவர் கோ.விசுவநாதன் ஏற்புரை

விஐடி வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு அமெரிக்கா நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அது குறித்து தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

முனைவர் பட்டம் பெற்ற கல்விக்கோ கோ.விசுவநாதன் அவர்கள் ஏற்புரையாற்றினார். அது குறித்து அவர் பேசுகையில், "இந்த கெளரவ டாக்டர் பட்டம்" வழங்கிய நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்திற்கும், வின்கேப்டன் பல்கலைக்கழகத்திற்கும், பின்கேப்டன் பல்கலைக்கழகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவர்கள் ஒராண்டு காலம் எடுத்துக் கொண்டார்கள். காரணம், அது அரசு பல்கலைக்கழகம், அவர்களுக்கு பல்வேறு நியதிகள் இருக்கிறது. எனக்கு கடிதம் வந்தது 2023 ஆம் ஆண்டு மே மாதம், எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது 2024 ஆம் ஆண்டு மே மாதம். இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பேராசிரியர் ஸ்ரீஹரிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி பட்ஜெட்

கல்விப் பணியை அவர்கள் மதிக்கிறார்கள், என்று தான் நான் கருதுகிறேன். உலகெங்கும் கல்வி பரவ வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், அதை ஆதரிக்கிறார்கள். உயர் கல்வியில் பின் தங்கிய நாடு, நம் நாடு. வளர்ந்த நாடுகளில் அது 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கிறது. புதிய கல்விக்கொள்கையில், 50 சதவீதமாக வளர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஒரு மாநிலம் மட்டுமே உயர் கல்வியில் 50 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

இதற்கு அரசு ஒரு காரணமாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் முழுமையான காரணம். நாம் கல்விக்கு அதிகமாக செலவழிப்பதில்லை. மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி, கல்விக்கு உரிய இடத்தை கொடுத்து அதற்காக அதிகம் செலவழிப்பதில்லை. இந்த வரவு, செலவு பற்றிய மத்திய அரசின் பட்ஜெட் 47 லட்சம் கோடி, அதில் கல்விக்காக ஒரு லட்சம் கோடி தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக மொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்காக செலவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் இன்னும் 3 சதவீதத்தை தாண்டவில்லை. கிட்டதட்ட, அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

வி.ஐ.டி ஸ்டார் திட்டம்

உலகத்தில் கல்விக்கு செலவிடும் நாடுகளுக்காக ரேங்க் போடுகிறார்கள். உலகளவில் 180 நாடுகளில் நாம் 155வது இடத்தில் இருக்கிறோம். ஆக, அந்த அளவுக்கு நாம் அதில் பின் தங்கியிருக்கிறோம். கல்வி வளர்ந்தால் தான், உயர் கல்வியால் வீடும், நாடும் வளரும். இதை நாம் இங்கு பார்க்கிறோம். வி.ஐ.டி-யில் இருக்க கூடிய ஸ்டார் திட்டத்தின் மூலம், கிராமங்களில் இருக்க கூடிய மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக கொடுக்கிறோம். அவர்கள் படிப்பை முடித்து போகும் போது வேலையும் வாங்கி கொடுக்கிறோம். 

அப்போது அவர்கள் வேலையில் வாங்கும் சம்பளத்தை பேராசிரியர்கள் மூலம் நான் அறிவேன். அப்போது அவர்கள், அவர்களுடைய தந்தை வாங்கும் சம்பளத்தை விட பத்து முதல் இருபது சதவீதம் அதிகமாக வாங்குகிறார்கள், முதல் மாதத்திலேயே. அது மாதிரி நாடு முழுவதும் செய்ய முடியும். வறுமை மற்றும் ஏழ்மையை விரட்ட கல்வியால் மட்டுமே முடியும். இலவசங்கள் ஓரளவு தான் கைகொடுக்கும், முழுமையாக முன்னேற வேண்டும் என்றால் அது கல்வியால் மட்டுமே முடியும்.

முதல்வரின் கல்வி உதவித் தொகை

நம் முதல்வர் அவர்கள் தற்போது உயர் கல்விக்கு செல்லகூடிய மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த திட்டத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்கும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலவசமாகவோ அல்லது வட்டி இல்லா கடன் பெற்று கொடுக்கும் விதத்திலாவது இதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இப்போது நாம் பெற்றிருக்கிற ஐம்பது சதவீதம் போதாது, உயர் கல்வியில் நாம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். ஜெர்மனி 75 சதவீதத்திலும், அமெரிக்கா 85 சதவீதத்தில் இருக்கிறது. தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா 100 சதவீதம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த கல்வி உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும். நாம் ஓரளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை நான் மறுக்கவில்லை. உலகளவில் பொருளாதாரத்தில் நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால், தனிநபர் வருமானம் என்று பார்த்தால் நாம் 140 இடத்தில் இருக்கிறோம்.

சாதி மறுப்பு திருமணங்கள்

இதற்கு காரணம், கல்வியை போதுமான அளவுக்கு நாம் கொடுக்காதது தான். ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருப்பதற்கும் இது தான் காரணம். ஏற்கனவே சமூகத்தில் சாதிகள் மூலம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. நம் நாட்டில் 25 ஆயிரம் சாதிகள் இருக்கின்றன. இவற்றை இல்லாமல் செய்ய முடியுமா? என்று தெரியாது. ஆனால், கல்வியால் இவற்றை குறைக்க முடியும். சாதி மறுப்பு திருமணங்கள் பெரும்பாலும் படித்தவர்கள் தான் செய்கிறார்கள். அவர்கள் தான் சாதி மற்றும் மதங்கள் பற்றி கவலைப்படுவதில்லை.

அதேபோல், பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ள நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இதை யாரும் பெரிதாக பேசுவதில்லை, ஒரு சிலர் மட்டும் தான் பேசுகிறார்கள். மேலே, இருக்கும் பத்து சதவீதம் பேர் 80 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் நாம் அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளி விட்டோம். அங்கு மேலே இருக்கிற ஒரு சதவீதம் பேர் 35 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இங்கு மேலே இருக்கும் ஒரு சதவீதம் பேர் 55 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இது சரியல்ல, இது நம்மை மிகப்பெரிய அழிவுக்கு கொண்டு சென்றுவிடும். இதை அரசு மாற்ற வேண்டும். அவர்கள் செய்ய முடியவில்லை என்றால் கல்வி இதை நிச்சயம் மாற்றும்.

ஜி.எஸ்.டி

இன்று ஜி.எஸ்.டி பற்றி அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஒரு மாணவருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றால் கூட ஜி.எஸ்.டி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இன்று கல்விக்கு அரசு உதவி செய்வதை விட்டுவிட்டு எங்களிடம் வசூல் செய்து கொண்டிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு என்று இரண்டு அரசுகளும் இதை தான் செய்கிறார்கள். இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், மேலே இருக்கும் அந்த ஒரு சதவீதம் பேரிடம் எவ்வளவு வசூலாகிறது என்று பார்த்தேன். 

vit university chancellor g.Viswanathan speech

ஜி.எஸ்.டி மாதத்திற்கு இரண்டு லட்சம் கோடி வசூல் ஆகிறது. இந்த இரண்டு லட்சம் கோடியில், கீழே இருக்கும், 3 சதவீதம் சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் 65 சதவீதம் வரியை செலுத்துகிறார்கள். 80 சதவீத சொத்துக்களை வைத்திருப்பவர்கள் 4 சதவீதம் வரை தான் வரி கட்டுகிறார்கள். கல்விக்கும் உதவி செய்வதில்லை, வரியும் அவர்களிடம் அதிகம் வசூல் செய்யப்படவில்லை.

அறைகுறை மக்கள் ஆட்சி

ஒரு நாட்டில் கல்வியும், மருத்துவமும் உயர்ந்தால் தான் அந்த நாடு உயர்வடையும், இவை இரண்டும் நம் நாட்டில் முன்னேற்றம் அடையவில்லை என்று தான் சொல்வேன். அப்படி கல்வி உயர்ந்தால் நாட்டில் ஜனநாயகமும் நிலைக்கும். இப்போது இருக்கிற மக்கள் ஆட்சி பேருக்கு தான் மக்கள் ஆட்சி. குறை உள்ள மக்கள் ஆட்சி அல்லது அறைகுறை மக்கள் ஆட்சி என்று சொல்லலாம். நாம் அறைகுறை மக்கள் ஆட்சியில் தான் இருக்கிறோம்.

தேர்தல் நடக்கும், ஆட்சி அமைப்பார்கள், ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்துவார்கள், பத்திரிகைகளை கட்டுப்படுத்துவார்கள், தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்துவார்கள், அப்படி பட்ட மக்கள் ஆட்சியை முழு மக்கள் ஆட்சியாக ஏற்றுக்கொள்வதில்லை. நாம் அந்த பட்டியலில் தான் இருக்கிறோம். இதற்கு காரணம் என்ன?, பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகள் அமையாதது ஒன்று.

அதேபோல் பத்திரிகைகளும் இங்கு கட்டுப்படுத்தப்படுவதாக உலக அளவில் சொல்கிறார்கள். அதற்கான ரேட்டிங்கிலும் 180 நாடுகளில் நாம் 161 வது இடத்தில் இருக்கிறோம். இந்த விசயத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கூட நமக்கு மேலே இருக்கின்றன. இதற்கு என்ன காரணம், நல்ல ஆட்சி அமைய வேண்டும். நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றால் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், அதற்கு நமக்கு அறிவு வேண்டும். அதை பெறுவதற்கு கல்வி வேண்டும்.

உயர் கல்வி திட்டம்

ஆக பொருளாதார உயர்வுக்கு மட்டும் இன்றி, நல்ல ஜனநாயக நாடாவதற்கும் கல்வி முக்கியம் பிறகு தனிமனித வறுமையை ஒழிப்பதற்கும் கல்வி தான் முக்கியம். அதனால், அரசுகள் கல்விக்கு அதிகமாக செலவிட வேண்டும் என்று நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அரசு செய்யும் வரை காத்திருக்காமல், நாங்கள் அதற்கான முயற்சியாக அனைவருக்கும் உயர் கல்வி என்ற திட்டத்தை தொடங்கி 10 ஆண்டுகளாக செய்துக் கொண்டிருக்கிறோம்.

யாரும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புடன் நின்று விடாமல், எதாவது ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ படிக்க வேண்டும், அதற்கான உதவியை நாங்கள் செய்கிறோம். இதுவரை எங்கள் திட்டத்தில் 8600 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். வட மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதால் தான் இத்தகைய முயற்சியில் நான் ஈடுபட்டேன். அதற்காக தொடங்கிய அறக்கட்டளைக்கு இதுவரை பத்து கோடி ரூபாய் மேல் நன்கொடை வந்திருக்கிறது, அதில் பெரும் பகுதி வி.ஐ.டி கல்லூரியிலிருந்து தான் செல்கிறது.

இந்த நேரத்தில் எங்கள் கல்லூரியின் பேராசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக கொடுக்கிறார்கள், அந்த தொகையும் இந்த அறக்கட்டளைக்கு தான் கொடுப்படுகிறது. இந்த மாவட்ட மாணவர்களுக்காக, வேறு எந்த எந்த மாவட்டத்தில் இருந்து வந்து அவர்கள் செய்யும் உதவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை அரசு தான் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் செய்யும் வரை நாம் காத்திருக்காமல், நம்மால் முடிந்த இதுபோன்ற உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர்

கல்வியால் மட்டுமே குற்றங்கள் குறையும், தனிமனித முன்னேற்றம் ஏற்படும், வறுமை நீங்கும், பொருளாதாரம் உயர்வடையும், நல்ல ஜனநாயக நாடு உருவாகும். இவை அனைத்தும் கல்வியால் மட்டுமே முடியும். வி.ஐ.டி கல்லூரி என்றால் எம்.ஜி.ஆர் அவர்களை நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது. நான், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று நான்கு முதல்வர்களுடன் பணியாற்றினேன். எம்.ஜி.ஆர் அவர்களிடம் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கேட்டேன். அவர் அரசிடம் பணம் இல்லை, நீங்கள் வேண்டுமானால் தொடங்குங்கள், அனுமதி தருகிறேன், என்றார்.

அப்படி தான் வி.ஐ.டி கல்லூரி 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது, இன்று 90 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். படிக்கும் மாணவர்களுக்கு நான் வேலை வாங்கி கொடுக்கிறேன். அவர்களுடைய முதல் மாதம் சம்பளம் அவர்களின் பேராசிரியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது. இன்று வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது, ஆனால் அதற்காக நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் படிப்பு மட்டுமே நம்மை முன்னேற்ற செய்யும் என்று கூறிக்கொண்டு, அரசு கல்விக்காக பல உதவிகளை செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், மகிழ்ச்சி அளிக்கும் சிறப்பான விழாவில் பங்கேற்கும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி, மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை தலைவர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நம் முதல்வர் என் மூலமாக வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு நியூயார்க் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள், சிறந்த கல்வியாளர் மட்டுமின்றி தமிழக அரசியலில் முக்கியமான பங்கு வகித்த பெருமைக்குரியவர். 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் மக்களைவை தேர்தலில் போட்டியிட்டு ஏற்றத்தாழ 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி டெல்லியில் திமுக-வின் அடையாளமாக திகழ்ந்தவர். பிறகு தமிழக அமைச்சராக பணியாற்றியவர், அண்ணாவின் ஆலோசகராகவும், அவரை பின்பற்றி கல்வி துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் வியக்க வைக்கிறது. 

1984 ஆம் ஆண்டு 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட வி.ஐ.டி கல்லூரி என்று பல்லாயிரம் மாணவர்களை உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கோ.விசுவநாதன் கல்வித்துறையின் ஏந்தலாக இன்று விளங்குகிறார். சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் தொண்டாட்டுபவரை விருதுகள், பாராட்டுகள் தானாக தேடி வரும். 

vit university chancellor g.Viswanathan with thirumavalavan

அதுபோல் தான் கோ.விசுவநாதன் பல விருதுகள் பெற்றிருக்கிறார். உயர் கல்விக்காக அவர் ஆற்றிய தொண்டை கவுரவிக்கும் விதத்தில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி. நான் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கெளரவ பட்டத்தின் மூலம் மேலும் பல ஆண்டுகள் உற்சாகமாக கோ.விசுவநாதன் அவர்கள் கல்வி தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நான் படித்த பல்கலைக்கழகம்

நான் படித்து முனைவர் பட்டம் பெற்ற அதே பல்கலைக்கழகத்தில் இன்று வேந்தருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது எனக்கும் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. ஐயா சொன்னது போல், நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு நான்கு செண்டர்கள் இருக்கிறது. நான் பவ்வோலோ செண்டரில் பட்டம் பெற்றேன். ஐயா வேறு ஒரு செண்டரில் பட்டம் பெற்றிருக்கிறார், என் மனைவி அந்த செண்டரை சேர்ந்தவர் என்பதால், என் ஊரில் இருந்து அவரை கவுரவித்தது போல் எனக்கு தோன்றுகிறது.

எங்கள் குடும்பத்தில் 6 பேர் மருத்துவ துறையிலும், ஆராய்ச்சி துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றோம். என் தந்தையின் அண்ணன், அவர் பொறியியல் துறையைச் சேர்ந்தவர் என்றாலும் இசை மீது அவருக்கு அதிக ஆர்வம். அதனால், கர்நாடக இசை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அவருக்கு இறுதியாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அப்போது என் தந்தை, அறிவுப்பூர்வமாக டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் அது என் அண்ணனுக்கு தான் வழங்க வேண்டும். அவருக்கு எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்று இருந்தேன், நல்ல வேலையாக அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது மகிழ்ச்சி என்றார். அப்போது நான், என் அப்பாவிடம், நானும் ஆறு வருடம் கஷ்ட்டப்பட்டு உழைத்து தானே டாக்டர் பட்டம் பெற்றேன், பிறகு நீங்கள் எப்படி, இதை சொல்லலாம் என்று கேட்டேன். அதுபோல், நான் படித்து பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தில் வேந்தருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளும், மரியாதையும், சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன் பேசுகையில்,  “அண்ணன் விஐடி நிறுவனர், வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொருப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். 

thol.thirumavalavan speech vit univeristy

இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன். வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார்.

அதனால், தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியை செய்து வருகிறார். கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். பெரியாரின் கருத்து இந்த மண்ணில் மேலும் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

பெரியார் அரசியல்

தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவங்களை சொன்னார்.

மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவளை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை.

சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்று கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றி பல முறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணி பல வெற்றிகளை கொடுத்து வருகிறார்கள்.

மாநில சுயாட்சி 

அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பறி போக கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்த தெளிவு, அந்த பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனை படைத்திருக்கிறார் என்பதால் தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. 

vit university chancellor g.Viswanathan with thol.thirumavalavann

இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிரது. இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்கிறார்கள், அதற்கு காரணம், தரமான கல்வி வழங்குவது தான். அதனால் தான் இப்படி ஒரு சிறப்பான பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் எங்கோ இருக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு அண்ணனின் அருமை தெரிந்திருக்கிறது. அவருக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் தேசியத்திற்கான கட்சி

அண்ணன் அவர்கள், கல்வி தளத்தில் ஆற்றி வருகின்ற பணிகள் பாராட்டுக்குரியவை, போற்றக்கூடியவை என்றாலும், தமிழுக்காகவும், தமிழ் தேசியத்திற்கும் அவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் மேலும் சிறப்பானவை. எங்களை போன்ற இளைய தலைமுறையினர் அண்ணன் வழியில் பணியாற்றி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வரும் கட்சி என்பதால் தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டியவர், அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்க கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன். என்றார். 

vit speech

தமிழ் இயக்க பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர், அமைப்புச் செயலாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரைப்பட பாடலாசிரியர் ஆவடி, சே.வரலட்சுமி, தமிழ் இயக்க கலை இலக்கிய ஊடக ஒருங்கிணைப்பாளர் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.கே ராஜராஜா மற்றும் ஏனைய ஒருங்கிணைப்பாளர்களும் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.