பிரசாரத்தில் பணம் வினியோகம்: அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது போலீசார் வழக்கு!
பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக நத்தம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விசுவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் போட்டியிடுகிறார். இதற்காக நத்தம் அருகில் உள்ள முளையூர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது.
இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து தேர்தல் வீடியோ கண்காணிப்புக்குழு பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கியதாஸ் நத்தம் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் அந்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்குமாறு நத்தம் கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தது தொடர்பாக அ.தி.மு.க வேட்பாளர் விசுவநாதன் மீது நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.