மாற்று திறனாளியை தாக்கியதாக சீர்காழி காவலர் மீது சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீ புற்றடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள சீர்காழி அருகே உள்ள திருவாலி கிராமத்தை சேர்ந்த கண்பார்வை அற்ற சரவணன் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்று கும்பாபிஷேக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சீர்காழி காவல்நிலைய காவலர் ஒருவர் தன்னை கண்பார்வை அற்றவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னை தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், சீர்காழி காவல்நிலையத்தில் உள்ள காவலரை மிரட்டிய வீடியோ, சாராய விற்பனைக்கு துணை போவதாக வெளியாக வீடியோ என பல்வேறு பதிவுகள் சீர்காழி காவல்நிலையம் பற்றி தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் கண்பார்வை அற்ற மாற்று திறனாளி தாக்கியதாக பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.