கேரளாவை உலுக்கிய விஸ்மயா தற்கொலை: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
கேரளாவில், கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விஸ்மயாவின் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் கிளப்பியது.

ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் பெற்ற விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது உறவினருக்கு தான் காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த விஸ்மயா தனது தந்தையுடன் பேசிய உரையாடலின் ஆடியோ தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் அவர் தன் தந்தையிடம் அழுது புலம்புவது கேட்பவர்களை கண்கலங்க வைப்பதாக உள்ளது. மேலும் அவரது மரணம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு ஒருநாள் முன்னதாக இந்த ஆடியோ உலா வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடியோவில், “என்னை இங்கே வாழ வைத்தால், என்னை மீண்டும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். நான் ஏதாவது செய்துகொள்வேன், இங்கே இவர் செய்வதை என்னால் தாங்க முடியாது. அச்சா (அப்பா), நான் திரும்பி வர விரும்புகிறேன். எனக்கு பயமா இருக்கு ”என்று விஸ்மயா கண்ணீருடன் சொல்வது கேட்கிறது.
அதற்கு அவர் தந்தை ஆறுதல் கூறினாலும், விஸ்மயா தான் பயத்தில் இருப்பதாக கூறி ஆடியோவில் அழுகிறார்.
இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் அவரது மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வந்தனர்.
கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்திருந்த நிலையில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்து அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்டும் எனவும் தெரிவித்தது .

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட விஸ்மயாவின் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை கொல்லம் கூடுதல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.