பிரதமர் தமிழகம் வருகை- கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய 50 பேர் கைது

modi prime minister black flag
By Jon Mar 30, 2021 10:13 AM GMT
Report

பிரதமர் வருகையையொட்டி கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். ஈழத்தமிழினப் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் பல்வேறு நாடுகளும் புகார் செய்தது. அதைதொடர்ந்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் 12 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் நடுநிலையாக இருப்பதாகக் கூறி, இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இந்தியாவின் இத்தகைய செயலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை என்று தெரிந்தும், இந்தியா இதில் இலங்கைக்கு எதிராக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த மோடிக்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

 பிரதமர் தமிழகம் வருகை- கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய 50 பேர் கைது | Visits Tamilnadu Black Flag Protesters Arrested

இதனையடுத்து இன்று பிரதமர் மோடி கேரளா பாலக்காடு மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் பாஜகவின் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் மோடி என்று பதாகைகள் ஏந்தி கருப்பு கொடி காட்டி கோவை பீளமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்..