பிரபல பேட்மிட்டன் வீராங்கனையை திருமணம் செய்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்!

marriage cinema
By Nandhini Apr 13, 2021 11:41 AM GMT
Report

வெண்ணிலா கபடிக் குழு மூலம் தமிழ் சினிமா துறைக்கு காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.  ராட்சசன், மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு ரஜினி நட்ராஜை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்தானது. இந்நிலையில், விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்து வந்தன. இதனால்தான் நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்தார் என்று பேசப்பட்டது.

விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் தங்கள் காதலை ஆரம்பத்தில் மறுத்து வந்தனர். விஷ்ணு விஷால், இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக விளக்கம் அளித்தார். ஆனால், இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகவே இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் தாங்கள் காதலித்து வருவதையும், திருமணம் செய்து கொள்ளவிருப்பதையும் அறிவித்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது, நடிகர் விஷ்ணு விஷால் தனது திருமண பத்திரிகையை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதில் பதிவிட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து விஷ்ணு விஷாலுக்கு திருமண வாழ்த்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.