ஆற்றில் கிடைத்த விஷ்னு சிலை; அப்படியே அயோத்தி ராமர் உருவம் - 900 ஆண்டு அதிசயம்!
பழங்கால விஷ்ணு சிலை ஒன்று கிருஷ்ணா ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு சிலை
கர்நாடகா, ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியில் விஷ்ணுவின் பழங்கால சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையுடன் பழமையான சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அதிசயம் என்னவென்றால், இந்த விஷ்ணு சிலை அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலை போன்றே சிறப்பம்சங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமர் உருவம்
இதுகுறித்து ராய்ச்சூர் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை விரிவுரையாளர் டாக்டர் பத்மஜா தேசாய் கூறுகையில், இச்சிலையில் விஷ்ணு நின்ற நிலையில் நான்கு கரங்களைக் கொண்டுள்ளார். வெங்கடேஸ்வரரை ஒத்ததாக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், விஷ்ணு சிலைகளில் பொதுவாகக் காணப்படும் கருடன் இந்தச் சிலையில் இல்லை. இந்த சிலை ஏதோ ஒரு கோயிலின் கருவறையை அலங்கரித்திருக்க வேண்டும். கோயிலுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும்போது ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம். கி.பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, தொல்பொருள் பிரிவை சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் சிலையின் நுணுக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.