தடுப்பூசி போட்டால் மட்டுமே உள்ளே அனுமதி : மதுரையில் அதிரடி அறிவிப்பு
மதுரையில் உள்ள தனியார் மாலில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில்கள், திரையரங்குகள், மால் போன்ற பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில் மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார்(விஷால்) மால் தடுப்பூசி போட்டால்தான் உள்ளே அனுமதி என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.இங்கு 60க்கும் மேற்பட்ட கடைகள் ஐந்து திரையரங்குகள் உள்ள நிலையில் சாதாரண நாட்களில் 7 ஆயிரம் வரையும் விடுமுறை நாட்களில் 18 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.
மாலின் நுழைவு பகுதியில் காவலர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை பார்த்து உறுதி செய்த பின்பே வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலை பரிசோதனையும், சானிடைசர் வழங்கிய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
அதேபோல் மாலுக்குள் வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்த ஏதுவாக வாசலில் சிறப்பு முகாம் ஒன்றை நடத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அனுமதிக்கப் படாததால் சோகத்துடன் வீடு திரும்புகின்றனர்.