பட்டாசு வெடி விபத்து - 8 பேர் படுகாயம், ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த நிலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் அதே பகுதியைச் சார்ந்த சண்முகராஜ், முத்துச்செல்வி உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சிகிச்சையில் இருந்த ஒருவர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்று தொடர்ந்து சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.