தப்பு செய்தால் தண்டனை இல்லை..! தட்டிக்கேட்டால் தண்டனை..! கன்னத்தில் பாட்டில் குத்து..!
விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த பெண்ணை தட்டிக்கேட்ட பெண்ணை பாட்டிலால் கன்னத்தில் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பலகுறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை அவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் செல்வி என்ற பெண் தட்டிகேட்டதால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் மதுபான கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இதில் தனலட்சுமியின் அட்டூழியம் அதிகரித்துள்ளதால் வழக்கம் போல் செல்வி இது தவறு என தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தனலட்சுமியும், அவரது கணவர் பெரியசாமியும் சேர்ந்து மதுபாட்டிலை உடைத்து செல்வியின் கன்னத்தில் குத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த செல்வியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தனலட்சுமி மற்றும் அவரது கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.