விருதுநகர் பாலியல் வழக்கில், கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன்
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேர் சிறார்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்
இதனிடையே பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமதுசிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர்களை பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த மெடிக்கல் குடோன் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மதுரை கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும் 4 மாணவர்களிடமும் விசாரணையை முடித்தனர்.
இந்த நிலையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் ஏப்.18 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விருதுநகர் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நான்கு சிறார்களுக்கும் சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.