வைர பேட்டை விராட் கோலிக்கு பரிசளிக்கும் தொழிலதிபர் - மதிப்பு இத்தனை லட்சமா?
தொழிலதிபர் ஒருவர் வைரத்தாலான பேட் ஒன்றை விராட் கோலிக்கு பரிசாக வழங்க உள்ளார்.
விராட் கோலி
கடந்த 2008ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அறிமுகமானார். அதில் இந்திய அணி கேப்டனாக தலைமையேற்று சிறப்பாக விளையாடி வெற்றியும் பெற்றார். இதனால் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் அந்த ஆண்டே இடம் பிடித்தார் விராட் கோலி.
தற்போது இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து, பல சாதனைகளையும் செய்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. மூன்று வடிவக் கிரிக்கெட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரராக விராட் கோலி இருக்கிறார்.
வைர பேட்
இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் கோலி தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அவரின் சாதனைக்காக சூரத்தை சேர்ந்த உத்பால் மிஸ்திரி என்ற தொழிலதிபர் ஒருவர் வைரத்தாலான பேட் ஒன்றை விராட் கோலிக்கு பரிசளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
11 மில்லி மீட்டர் உயரத்தில் 1.04 கேரட் அளவிலான வைரத்தை கிரிக்கெட் பேட்டை போல் வடிவமைத்துள்ளார். இந்த வைரம் முழுவதுமாக மெருகூட்டப்படாமல் உண்மை வைரம் என்று உணர்த்து விதமாக பட்டை தீட்டப்பட்டுள்ளது என்று உத்பால் மிஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைர பேட்டின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.