100வது டி20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி - சாதனை படைப்பாரா?
நாளை தன்னுடைய 100வது டி20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் முதலில இலங்கையில்தான் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
6 அணிகள் களத்தில் இறங்குகிறது
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் மோதல்
6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்தில் மோத உள்ளன. இதனையடுத்து, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன.
சாதனை படைப்பாரா விராட் கோலி?
நாளை தன் 100-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாட உள்ளார். இதனையடுத்து, இந்திய வரலாற்றில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 100-வது போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடங்கிய கோலி இதுவரை டி-20, 99 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதுவரை அவர் விளையாடியுள்ள 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3,308 ரன்களை குவித்திருக்கிறார்.
இந்நிலையில், நாளை தன்னுடைய 100வது டி-20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி சதம் அடித்து சாதனைபடைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.