“இதெல்லாம் வெட்கக்கேடானது”-கடுப்பான விராட் கோலி
மழையின் காரணமாக 5ஆம் நாள் ஆட்டம் நடைபெறாமல் போனது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கும், இந்திய அணி 278 ரன்களுக்கும், 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 303 ரன்கள் எடுக்க இந்திய அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை துரத்திய இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது. இன்னும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்பதால் 5 ஆம் நாள் ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.
ஆனால் மழை காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 5 ஆம் நாளில் மழை பெய்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆட்டம் நடக்காதது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம் என நினைத்தோம். ஆனால் டிராவில் முடிந்தது வருத்தமள்இப்பதாகவும் விராட் கோலி கூறியுள்ளார்.