IPL-இல் இருந்து விராட் கோலி விலக வேண்டும்...ரவிசாஸ்திரி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி விலக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இம்முறை முன்னாள், நடப்பு சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகள் படுமோசமாக விளையாடி தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.
அதேசமயம் தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி மீண்டும் தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இம்முறையும் கோப்பை கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு தொடரில் படுமோசமாக விளையாடி ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.இதனிடையே விராட் கோலி இடைவிடாது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். மனதளவில் புத்துணர்ச்சி பெற அவருக்கு ஓய்வு மிகவும் அவசியமாகும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பு தொடரில் ஏற்கனவே பாதி போட்டிகளில் விளையாடி விட்ட கோலி எஞ்சிய ஐபிஎல் போட்டியில் இருந்து விலகவேண்டும். இதனை நான் கோலிக்காக மட்டும்சொல்லவில்லை. இந்திய அணிக்காக ஆடும் அனைவருக்கும் இந்த யோசனையை சொல்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ஜொலிக்க சில நேரம் இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை விராட் கோலியால் இன்னும் 5-6 ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.