நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட..விராட் கோலியை வம்பிலுக்கும் முன்னாள் வீரர்
டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வும் பெற வேண்டும் என முன்னாள் வீரர் சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து இந்திய அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி, நேற்று முன்தினம் திடீரென டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
டி.20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக விராட் கோலி அறிவித்துவிட்டதால், டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பல முன்னாள் வீரர்களும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதமும் கிரிக்கெட் வட்டாரத்தில் நடைபெற்று வருவதால், முன்னாள் வீரர்கள் பலரும் இது குறித்தான தங்களது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் தேர்வாளரான சர்ந்தீப் சிங், விராட் கோலி டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரந்தீப் சிங் பேசுகையில், “விராட் கோலி டி.20 போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகி கொள்ள வேண்டும் என்பது தான் எனது கருத்து.
கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டதால் மட்டுமே அவரால் பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்திவிட முடியாது. டி.20 போட்டி என்பது அடித்து விளையாடுவது மட்டுமே, அது திறமை சார்ந்த போட்டியல்ல.
எனவே விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருந்தால் டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சர்ந்தீப் சிங், “விராட் கோலி எதற்காக டி.20 உலகக்கோப்பை துவங்கும் முன்னரே கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதை அறிவித்தார் என்று தெரியவில்லை.
இந்திய அணி டி.20 உலகக்கோப்பையை வென்றபிறகு கூட விராட் கோலி இதை அறிவித்திருக்கலாம், அல்லது டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது கூட இதனை அறிவித்திருக்கலாம்.
அதே போல் அடுத்த வருட (2022) டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விராட் கோலி விளையாடுவாரா என்பதும் தெரியவில்லை, ஆனால் அது குறித்தும் விராட் கோலியிடம் இந்திய நிர்வாகம் பேசியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.