ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி – அதிர்ந்து போன இலங்கை வீரர்கள்
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ருத்ரதாண்டம் ஆடி 166 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி
கேரளாவின் திருவணந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய விராட் கோலியுடன் கூட்டணி சேர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மன் கில் 89 பந்துகளில் சதம் அடித்துவிட்டு, மொத்தம் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயருடன் கூட்டணி சேர்ந்த விராட் கோலி, முதல் ஒருநாள் போட்டியை போன்று இந்த போட்டியிலும் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 85 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலிக்கு இது 46வது சதமாகும். ஒட்டுமொத்தமாக விராட் கோலிக்கு இது 74வது சதமாகும்.
சதம் அடித்தபின் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த விராட் கோலி இலங்கை அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தார். ஸ்ரேயஸ் ஐயர் (38), கே.எல் ராகுல் (7) மற்றும் சூர்யகுமார் யாதவ் (4) ஆகியோர் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், கடைசி பந்துவரை இலங்கை வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய விராட் கோலி சதம் அடித்த பிறகு எதிர்கொண்ட 25 பந்துகளில் 66 ரன்கள் குவித்து, மொத்தம் 110 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 166* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 390 ரன்கள் குவித்தது.
மிரட்டி எடுத்த சிராஜ்
இதன்பின் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணியின் முதல் மூன்று வீரர்களும் முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இலங்கை அணியில் வெறும் மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் வெறும் 73 ரன்களுக்கே ஆல் அவுட்டான இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.