புதிய T20யில் விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு இனி இடமே இல்லை...? - பிசிசிஐ திட்டம்
புதிய T20 அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு இனி இடமே இல்லை என்று பிசிசிஐ திட்டம் தீட்டுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் சமீபத்தில் நிறைவடைந்தது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர்.
மூத்த வீரர்களுக்கு இடம் கிடையாது
இந்நிலையில், இந்திய டி20 அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் டி20 அணியிலிருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2024 டி-20 உலகக்கோப்பையில் முற்றிலும் ஒரு புதிய அணி களமிறக்கப்படும், என்றும் ஹர்திக் பாண்டியா நிரந்தர கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தலைமை அதிகாரிகளில் ஒருவர் பேசுகையில், இனி ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் டி20 போட்டிகளுக்கான அணியில் இருக்கவே மாட்டார்கள். பிசிசிஐ யாரையும் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தாது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும் என்றார்.