விராட் கோலியின் கேப்டன் சகாப்தம் முடிவுக்கு வந்தது - இதுவரை அவர் சாதித்தது என்ன? இதோ

Resignation Virat Kohli what achieved india cricket captain
By Nandhini Jan 16, 2022 04:33 AM GMT
Report

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கேப்டன் பதவியிலிருந்த விராட் கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார்.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா எதிராக 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலியல், டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு வெளியிட்டார்.

இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய டி-20 மற்றும், பெங்களூர் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியது, ஒருநாள் போட்டிகளின் கேப்டசியிலிருந்து பிசிசிஐ-யால் தூக்கப்பட்டது என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது மீதமுள்ள டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே முன்வந்து விலகிக் கொள்வதாக கோலி அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செய்த சாதனைகள் இதோ - தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை முதல்முறையாக வழி நடத்தினார் விராட் கோலி.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கேப்டன் பதவியிலிருந்த கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்துக் கொண்டிருந்தார். இதுவரை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

இதில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் இந்திய அணி சந்தித்திருக்கிறது. 11 போட்டிகளை டிரா செய்துள்ளது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5,864 ரன்கள் குவித்திருக்கிறார்.

இதில் 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி வென்றிருக்கிறார்.

இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள் (20) அடித்தவர் என்ற சாதனையும் கோலிக்கே சொந்தம். டெஸ்ட் அணி கேப்டனாக வெற்றி சதவிகிதத்தை 58.82 ஆக வைத்திருக்கிறார் விராட் கோலி.

இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் (68 போட்டிகள்) மற்றும் அதிக டெஸ்ட் வெற்றிகளை தந்தவர் என பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி. கிரேம் ஸ்மித் (53 வெற்றி), ரிக்கி பாண்டிங் (48 வெற்றி) மற்றும் ஸ்டீவ் வாக் (41 வெற்றி) ஆகியோருக்கு அடுத்து, டெஸ்ட் வரலாற்றில் 4வது வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது , இந்தியா தரவரிசையில் இருந்த இடம் 7. அவர் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள இப்போது, இந்தியா தரவரிசையில் உள்ள இடம் ஒன்று.

டெஸ்ட் கேப்டனாக கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்படவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.