எல்லாத்துக்கும் உங்க அரசியல் தாண்டா காரணம்… விராட் கோலியின் திடீர் முடிவால் வேதனையடைந்த ரசிகர்கள் !!
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி,
கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தாலும், கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி., கோப்பைகளை கூட வெல்லாதது கோலியின் கேப்டன் பதவி மீது விமர்ச்சனங்களை எழுப்பியது.
கடந்த ஒரு வருட காலமாகவே கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்ட விராட் கோலி, சமீபத்தில் நடைபெற்ற டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் திடீரென டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.
டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வேன், பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என விராட் கோலி தெரிவித்திருந்தார்.
ஆனால் பிசிசிஐ.,யோ விராட் கோலி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியது.
ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதை ரசிகர்கள் இன்று வரை முழுதாக ஏற்றுக்கொள்ளாத நிலையில், தற்போது விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.
என்ன தான் ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த விராட் கோலியை விட சிறந்த ஆள் கிடையாது என ஒட்டுமொத்த ரசிகர்களும் நம்பியிருந்த நிலையில், விராட் கோலி இந்த அதிர்ச்சி செய்தியை இன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விராட் கோலியின் இந்த திடீர் முடிவு சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான ரசிகர்கள் பிசிசிஐ., தொடர்ந்து கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவும், பிசிசிஐ.,யில் நிலவி வரும் அரசியலாலும் தான் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
என கருதி சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை வேதனையுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் விராட் கோலியின் இந்த முடிவு குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.