இங்கிலாந்து தொடரில் சாதனைகள் படைக்க காத்திருக்கும் விராட் கோலி

Virat Kohli INDvsENG
By Petchi Avudaiappan Aug 02, 2021 10:07 AM GMT
Report

 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 4 ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. இந்த தொடரில் முக்கியமான ஐந்து சாதனைகளை விராட் கோலி படைக்கவுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 7547 ரன்கள் எடுத்துள்ள அவர் இன்னும் 453 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் ஜஸ்டின் லாங்கர் (7696), இயன் பெல் (7727), மிக்கேல் ஆதர்டன் (7728) ஆகியோரை பின்னுக்கு தள்ளவுள்ளார்.

அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கொண்டு 211 ரன்கள் அடித்தால், அந்த அணிக்கு எதிராக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை 27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித்தையும், இரண்டு சதம் அடித்தால் ஹசிம் அம்லா, மைக்கேல் கிளார்க் சாதனையை முறியடிக்க உள்ளார்.

விராட் கோலியும், கிளைவ் லாய்டு தலா 36 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் விராட் கோலி கிளைவ் லாய்டு சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றால் கபில்தேவ், அஜித் வடேகர்,டிராவிட் ஆகிய வீரர்களை தொடர்ந்து கோலி தலைமையிலான இந்திய அணி சாதனைப் படைக்க காத்திருக்கிறது.