வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம் - விராட் கோலி பெருமிதம்
ஆஃப்கானிஸ்தான் அணிகு எதிரான போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 69 ரன்களும், ரோஹித் சர்மா 74 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்க கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்து காட்டடி அடித்த ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களும், ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 35 ரன்களும் எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 210 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாசய் (13) மற்றும் ஷாஜத் (0) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய வீரர்களில் கரீம் ஜனத் 42* ரன்களும், கேப்டன் முகமது நபி 35 ரன்களும் எடுத்து கொடுத்தாலும்,
மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, அஸ்வின் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளது மூலம் ஒட்டுமொத்த அணிக்கும் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், “இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. நாங்கள் முதல் இரண்டு ஓவர்களை அசால்டாக எதிர்கொண்டுவிட்டால் போதும் எதிரணி வீரர்களுக்கு தானாக நெருக்கடி ஏற்படும்.
கடந்த போட்டிகளில் நாங்கள் சில தவறுகளை செய்துவிட்டோம். டி.20 போட்டிகள் அதிக சவாலானது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது அடுத்தடுத்து வரும் வீரர்களின் நெருக்கடியை குறைக்கும்.
எங்களால் என்ன முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே முக்கியம். நாங்கள் எப்பொழுதும் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.
அஸ்வின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளது ஒட்டுமொத்த அணிக்கும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சை பார்த்தோம்,
அஸ்வின் மூலம் மிடில் ஓவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியும், அஸ்வினே இந்த போட்டியின் எங்களின் பலமாக அமைந்தார்” என்று தெரிவித்துள்ளார்.