ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி? இதுதான் காரணமா?
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி ஓய்வா?
இந்தியா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் விராட் கோலி. சச்சினின் சில சாதனைகளை முறியடித்துள்ள விராட் கோலி, தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கோப்பையை இந்தியா அணி வெல்வதற்கு, விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார்.
கோப்பையை வென்றதும் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஓய்வு பெற உள்ளதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாகவும், கோலியின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் நடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது.
இந்த தோல்விக்கு அணியின் சீனியர் வீரர்கள்தான் காரணம் என பிசிசிஐ கூட்டத்தில் பேசப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சீனியர் வீரர்கள் சரியாக பயிற்சிக்கு வருவதில்லை, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள பிசிசிஐ, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே 7 ஆம் தேதி, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, அணியின் முக்கிய வீரரான விராட் கோலி ஓய்வு பெரும் முடிவில் உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணிக்காக, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, 30 சதம், 31அரை சதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.