சத்தமே இல்லாமல் விராட் கோலி செய்த சாதனை - மகிழ்ச்சியில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டன்கள் பட்டியலில் கோலி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியை 63 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ள அவர் 37 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் (53 வெற்றி), முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்கள் ரிக்கி பாண்டிங் (48 வெற்றி), ஸ்டீவ் வாக் (41 வெற்றி) ஆகியோர் உள்ளனர்.