விராட் கோலி சொன்னத கேக்கல...உண்மையை உடைத்த கங்குலி

Open Talk Virat Kohli Sourav Ganguly Not Reacted
By Thahir Dec 11, 2021 06:15 AM GMT
Report

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ., தலைவரான சவுரவ் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக திடீரென அறிவித்திருந்தார்.

பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்த விராட் கோலி,

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.

இதனால் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியை மிக சிறப்பாக ரோஹித் சர்மா வழிநடத்தியதால்,

விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ., திடீரென அறிவித்தது.

சமகால கிரிக்கெட் உலகின் கிங்காக திகழ்ந்து வரும் விராட் கோலி, திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளதால்,

முன்னாள் வீரர்கள் பலர் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிசிசிஐ., தலைவரான சவுரவ் கங்குலி விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், “டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று விராட் கோலியை பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொண்டோம்.

கேப்டனை மாற்றும் ஐடியாவே கிடையாது. ஆனால் விராட் டி20 கேப்டன்சியிலிருந்து விலகினார். டி20 அணியை ஒரு கேப்டனும்,

ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டனும் வழிநடத்துவதை தேர்வாளர்கள் விரும்பவில்லை. எனவே தான் ஒருநாள் அணியின் கேப்டன்சியையும் ரோஹித்திடமே கொடுத்தனர் ” என்று தெரிவித்துள்ளார்.