நீயா..நானா..டி20 தரவரிசை பட்டியலில் போட்டி போடும் விராட் கோலி,ராகுல்

KL Rahul Virat Kohli T20 IPL2021
By Thahir Sep 16, 2021 02:43 AM GMT
Report

ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோா் முறையே தங்களது 4 மற்றும் 6-ஆவது இடத்தில் நீடிக்கின்றனா்.

தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையேயான டி20 தொடா் நிறைவடைந்த நிலையில், புதிய தரவரிசை புதன்கிழமை வெளியானது.

நீயா..நானா..டி20 தரவரிசை பட்டியலில் போட்டி போடும் விராட் கோலி,ராகுல் | Virat Kohli Kl Rahul T20 Ipl2021

அதில் தென் ஆப்பிரிக்க வீரா் குவின்டன் டி காக் 8-ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லீவிஸ் ஓரிடம் சறுக்கி 9-ஆவது இடத்திலும் உள்ளனா். பேட்ஸ்மேன்கள் பிரிவில் இங்கிலாந்தின் டேவிட் மலான் முதலிடத்திலும் ((841 புள்ளிகள்), பாகிஸ்தானின் பாபா் அஸாம் 2-ஆவது இடத்திலும் (819), ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் (733) மூன்றாவது இடத்திலும் உள்ளனா்.

பௌலா்கள் பிரிவில் இந்தியா்கள் எவரும் முதல் 10 இடங்களுக்குள்ளாக இல்லை. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாவிட்டாலும் யுஜவேந்திர சஹல் 25-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

வங்கதேசத்தின் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 2 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். மெஹதி ஹசன் 4 இடங்கள் முன்னேறி 20-ஆவது இடத்துக்கும், நசும் அகமது 25 இடங்கள் ஏற்றம் கண்டு 15-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவின் டப்ரைஸ் ஷம்ஸி 775 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, இலங்கையின் வனிந்து ஹசரங்கா 747 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 689 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனா்.

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்துக்கு (285 புள்ளிகள்) முன்னேற, அந்த இடத்திலிருந்த வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-ஆவது இடத்துக்கு (275) தள்ளப்பட்டாா்.

ஸ்காட்லாந்தின் ரிச்சா்ட் பெரிங்டன் 3-ஆவது இடத்தில் (194) இருக்கிறாா். இப்பிரிவிலும் இந்தியா்கள் எவரும் முதல் 10 இடங்களில் இல்லை.