இந்திய அணியின் தோல்விக்கு இது மட்டும் தான் காரணம் ; விராட் கோலி வேதனை !!

டூபிளசிஸ், டி காக் என சீனியர் வீரர்கள் பலர் இல்லாத தென் ஆப்ரிக்கா அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை பறிகொடுத்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில்,

இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்து கொடுத்தாலும்,

மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ராஹ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் 100* ரன்கள் எடுத்து கொடுத்தாலும்,

சீனியர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் வெறும் 198 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு வழக்கம் போல் அந்த அணியின் கீகன் பீட்டர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இலக்கை ஈசியாக எட்டிய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  

இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “இது மிக சிறந்த போட்டி. முதல் போட்டியில் நாங்கள் மிக சிறப்பாக விளையாடினோம், ஆனால் முதல் போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்கா அணி தோல்வியில் இருந்து ஈசியாக மீண்டு இரண்டாவது போட்டியில் எங்களை வீழ்த்தியது, இரண்டாவது போட்டியின் மூலம் கிடைத்த உத்வேகத்துடன் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது.

நாங்கள் முக்கியமான நேரங்களில் ஒரு சில தவறுகள் செய்தோம், சரி செய்யப்பட வேண்டிய குறைகள் அதிகம் உள்ளன. தென் ஆப்ரிக்கா அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது.

பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். எதிரணியின் பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பேட்டிங்கில் அதிகமான முன்னேற்றம் தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இந்த தோல்விக்கு பேட்டிங்கில் சரியாக செயல்படாததே காரணம். ரிஷப் பண்டின் சதம் உள்பட ஓரிரு நல்ல விசயங்கள் இந்த தொடரின் மூலம் நடைபெற்றுள்ளது.

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு சிறப்புமிக்கது” என்று தெரிவித்தார்.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்