“நாங்க அடி வாங்காத இடமே கிடையாது” - சரிவை சந்தித்த விராட் கோலி

ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மோசமான பின்னடைவை சந்தித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள சூழலில் டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணியில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே டாப் 10 இடங்களுக்குள் வந்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதுவும் விராட் கோலி இல்லை. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பை மற்றும் வங்கதேச தொடர் என அவரின் புள்ளிகள் உயர்ந்துள்ளன. இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் 805 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஏய்டன் மர்க்ராம் 796 புள்ளிகளுடனும் 3வது இடத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர் முகமது ரிஸ்வான் 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் விராட் கோலி பின்னடைவை சந்தித்துள்ளார்.

நியூசிலாந்து டி20 தொடரில் அவர் விளையாடததால் 8வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதே போல ரோகித் சர்மா முன்னேற்றம் கண்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடியதால் 2 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் கே.எல்.ராகுல் மட்டும் தான். 729 புள்ளிகளுடன் அவர் 4வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. டாப் 10 இடங்களுக்குள் ஒரு இந்திய பவுலரின் பெயர் கூட இடம்பெறவில்லை.

இலங்கை வீரர் வானிண்டு அசரங்கா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமார் 566 புள்ளிகளுடன் 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதே போல ரவிச்சந்திரன் அஸ்வின் 92வது இடத்தையும், அக்‌ஷர் பட்டேல் 112 வது இடத்தையும் பிடித்து முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டதாலும், அதிகளவில் டி20 போட்டிகளில் பங்கேற்காததாலும் தான் தரவரிசைப்பட்டியலில் இப்படி பின்னடைவை சந்திக்க காரணம் என கூறப்படுகிறது.

எனவே இதனை சரிசெய்ய இனி வரும் தொடர்களில் டி20 போட்டிகளுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்