கோலி போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கிய இங்கிலாந்து - வரலாற்று சாதனை படைத்து அசத்தல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி முதலில் வலுவான நிலையில் இருந்தது. எப்படியும் இங்கிலாந்து வெற்றி பெற்று விடும் என்ற நினைப்பில் தான் அந்த அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ஆனால் இங்கு இந்திய கேப்டன் கோலியிடம் வேறொரு திட்டம் இருந்தது.
இந்திய அணிக்கு நிலையாக நிலைத்து நின்று எப்போதும் குடைச்சல் கொடுப்பது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மட்டும் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே அவரின் விக்கெட்டை குறிவைக்காமல் மறுமுனையில் இருக்கும் வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்ற திட்டம் தீட்டப்பட்டது.
இதற்கேற்றவாறு பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் கேப்டன் விராட் கோலியும் ஆகச்சிறந்த கேப்டன் என பெயர் பெற்றுள்ளார். SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் 3 வெற்றிகளும், ஆஸ்திரேலியாவில் 2 வெற்றிகளும், தென்னாப்பிரிக்காவில் ஒரு வெற்றியும் என மொத்தம் 6 வெற்றிகளை இந்தியாவுக்காக அவர் வென்றுக் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.