பரிசளித்து இளம் வீரரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கிங் கோலி..என்ன பரிசு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரராக அறியப்படும் சுப்மான் கில்லுக்கு, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு ‘அண்டர்-19’ கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் களமிறங்கிய சுப்மான் கில், அதிரடியாக விளையாடி அதிக ரன்களை குவித்து அந்த தொடரில் சாதனை படைத்தார்.
விராட் கோலி போலவே விளையாடுகிறார் என அனைவராலும் பாராட்டப்பட்ட சுப்மான் கில், சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரருக்கான விருதை 3 முறை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடி, இந்திய டெஸட் அணியில் இடம் பெற்று, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில், அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
இதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தாலும் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். ஐபிஎல் தொடரில் முன்னதாக கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த நிலையில் தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
சுப்மான் கில் திறமையான வீரராக இருந்தாலும், பெரிய ஸ்கோர் அடிக்காமல் அவுட் ஆகிறார் என சச்சின் டெண்டுல்கர் விமர்சித்திருந்த நிலையில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி பட்டையை கிளப்பினார் சுப்மான் கில்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சுப்மான் கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதற்கு கீழே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, வாட்ச் சூப்பராக இருக்கு என்று கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு சுப்மான் கில், கிங் ஒருவர் பரிசாக அளித்தார் என்று பதில் கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விராட் கோலி இளம் வீரருக்கு அளித்த பரிசு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.