விராட் கோலி ஆதங்கம்; உடனே முடிவை மாற்றிய பிசிசிஐ - முக்கிய விதி மாற்றம்!
விராட் கோலியின் அதிருப்தியை அடுத்து வீரர்களுக்கான கட்டுப்பாட்டை பிசிசிஐ தளர்த்துள்ளது.
விராட் கோலி கோரிக்கை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
தனியாக பயணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு 45 நாள் சுற்றுப்பயணத்தின்போதும் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.
பிசிசிஐ முடிவு
அதன்படி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது வீரர்களின் குடும்பத்தினர் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய விராட் கோலி, "வெளிநாட்டு பயணங்களின்போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து மீள குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் அவசியமானது என்பதை பலரும் உணரவில்லை.
குடும்பத்தினரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்த முடிவுகளை எடுக்கும்போது, நிலைமையைப் புரிந்து கொண்டவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது, வெளிநாட்டு தொடர்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை பிசிசிஐ நீக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.