தொடர் தோல்விக்கு பின் நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக வெற்றியை பதிவு செய்த விராட் கோலி
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 69 ரன்களும், ரோஹித் சர்மா 74 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்க கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்து காட்டடி அடித்த ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களும், ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 35 ரன்களும் எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 210 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாசய் (13) மற்றும் ஷாஜத் (0) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய வீரர்களில் கரீம் ஜனத் 42* ரன்களும், கேப்டன் முகமது நபி 35 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ரவிச்சந்திர அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அதே போல் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான முகமது ஷமி, அஸ்வின், கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.