ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு துக்கம் அனுசரிப்பு: உதகையில் நாளை கடையடைப்பு
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், உதகையில் நாளை கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த காட்டேரிப்பள்ளம் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று காலை ராணுவ ஹெலிகாப்டர், கடும் பனிமூட்டம் காரணமாக மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுவரப்பட்டு, பரிசோதனைகள் முடிக்கப்பட்டன.
இதனிடையே, உயிரிழந்த முப்படைகளில் தளபதி மற்றும் வீரர்களின் உடல்களுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் உதகையில் நாளை முழு கடையடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வகையான கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகங்களும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.