விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கும் ஆர்சிபி நிர்வாகம் - சோகத்தில் ரசிகர்கள்
ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலியை அணி நிர்வாகம் நீக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விராட் கோலியை ஆர்சிபி நிர்வாகம் உடனடியாகவே கேப்டன்சியிலிருந்து நீக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்குக் கூறும்போது தெரிவித்துள்ளார். அபுதாபியில் திங்களன்று கொல்கத்தா அணியிடம் படுசொதப்பலாக ஆடி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதில் விராட் கோலியே 5 ரன்கள்தான் எடுத்தார், அதுவும் பிரசித் கிருஷ்ணாவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்,
கொல்கத்தா அணி 10 ஓவர்களில் கதையை முடித்து வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியின் 6-வது குறைந்த ஸ்கோராகும் இது.
அவுட்ஸ்விங்கர் பிறகு ஒரு இன்ஸ்விங்கர் என்றால் ஆட்டமிழந்து விடுகிறார் இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
மேலும் கோலியின் உடல்மொழியிலும் தொய்வு ஏற்பட்டதைக் கவனிக்க முடிந்தது. அதாவது கேப்டன்சியிலிருந்து விலகப்போகிறவர் ஒருவரின் உடல்மொழியாகவே இருந்தது.
கவுதம் கம்பீரும் தொடர் முடிந்தவுடன் அறிவித்திருக்க வேண்டும் முதலிலேயே அறிவித்து விட்டால் அணியின் ஒருமை குலையும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில்தான் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முன்னாள் வீரர் ஒருவர் கோலி பாதியிலேயே கேப்டன்சியிலிருந்து இறக்கப்படுவார் என்கிறார்.
"கொல்கதாவுக்கு எதிராக அவர் ஆடியதைப் பாருங்கள், அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பெரிய அளவில் திணறி வருகிறார்.
இந்த ஐபிஎல் தொடரின் பாதியிலேயே அவர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு புதிதல்ல, தினேஷ் கார்த்திக் பாதியிலேயே நீக்கப்பட்டார், வார்னர் அப்படித்தான் நீக்கப்பட்டார். ஒன்று அவர்கள் நீக்கப்பட்டார்கள் அல்லது பாதியில் அவர்களாகவே கேப்டன்சியை துறக்க வைக்கப்பட்டனர்.
இது ஆர்சிபியிலும் நிகழலாம். கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியை பார்த்த போது எனக்கு இதுதான் தோன்றியது.
இன்னும் ஒரு போட்டி இப்படி தோல்வியடைந்தால் ஆர்சிபி கேப்டன்சியில் உடனேயே மாறுதல் வருவது நிச்சயம். " என்கிறார் அவர்
டேனியல் வெட்டோரி போன பிறகு கோலி 2013 தொடரில் ஆர்சிபி கேப்டன் ஆனார், ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.
132 போட்டிகளில் ஆர்சிபி 62- ல் தான் கோலி கேப்டன்சியில் வென்றுள்ளது. 66 போட்டிகளை தோற்றுள்ளார். இவருக்குப் பதில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அல்லது யஜுவேந்திர செகல் பெயரும் அடிபடுகிறது.
பந்த், சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து இளமையின் பாதையில் தேவ்தத் படிக்கல் பெயரும் அடிப்பட்டு வருகிறது.