தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - வேதனையில் விராட் கோலி

Cricket IPL 2021 Virat Kohli
By Thahir Sep 22, 2021 04:12 AM GMT
Report

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - வேதனையில் விராட் கோலி | Virat Kohli Cricket Ipl 2021

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும் விதமாக கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிறிது நேரம் தாக்குபிடித்த படிக்கல் 22 ரன்களிலும், அறிமுக வீரர் பாரத் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் களத்திற்கு வந்த டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் உள்பட பெங்களூர் அணியின் அனைத்து வீரர்களும் கொல்கத்தாவின் பந்துவீச்சை எதிரொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 19 ஓவர் முடிவில் வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்பின் வெறும் 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுப்மன் கில் 48 ரன்களும், அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் 41* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 10வது ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பெங்களூர் வீரர்கள் அனைவரும் இந்த தோல்வியால் கிடைத்துள்ள பாடத்தின் மூலம் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“பேட்டிங்கில் எங்களுக்கு பார்ட்னர்சிப் சரியாக அமையவில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் பேட்டிங் செய்ய தவறிவிட்டோம். ஆடுகளத்தின் தன்மை நாங்கள் எதிர்பார்த்ததை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

20 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது ஏற்று கொள்ள முடியாது, இதனை எங்கள் வீரர்கள் எச்சரிக்கை மணியாக எடுத்து கொண்டு தங்களது ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

வருண் சக்கரவர்த்தி மிக சிறப்பாக பந்துவீசினார், அவரது பந்துவீச்சின் போது நான் சக வீரர்களிடம் அவரை பற்றி தான் பேசி கொண்டிருந்தேன், இந்திய அணிக்காக விளையாடும் போது வருண் சக்கரவர்த்தி இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்வார் என கூறினேன்.

இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.