திடீரென விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பிசிசிஐ - கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக திடீரென அறிவித்திருந்தார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்த விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியை மிக சிறப்பாக ரோஹித் சர்மா வழிநடத்தியதால்,
விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
பிசிசிஐ, நிர்வாகமும் இதே முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் எதிர்வரும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து ரோகித், ஒருநாள் போட்டிகளிலும் அணியை வழிநடத்த உள்ளார்.
கோலி, இந்திய டெஸ்ட் அணியை மட்டுமே வழிநடத்துவார் என தெரிவித்துள்ளது பிசிசிஐ.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக சம்மத்திக்காத போதிலும் பிசிசிஐ., விடாப்பிடியாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது வேதனைகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.