RCB vs CSK; ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த விராட் கோலி
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
CSK vs RCB
இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில், 33 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட66 ரன்களை குவித்ததன் மூலம், விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
விராட் கோலி சாதனைகள்
விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 505 ரன்கள் எடுத்துள்ளார். கோலி ஒரு ஐபிஎல் தொடரில் 500க்கு அதிகமான ரன்கள் எடுப்பது இது 8வது முறையாகும்.
இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் 7 முறை எடுத்திருந்தார்.
மேலும், சென்னை அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் 1,146 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் சென்னை அணிக்கு எதிரான அவரது 10வது அரை சதம் ஆகும். இதன் மூலம், சென்னை அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோர் 9 அரைசதத்துடன் 2வது இடத்தில் உள்ளனர். மேலும், நேற்று அடித்த 5 சிக்ஸர்கள் மூலம், ஒரு மைதானத்தில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், விராட் கோலி 154 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். முன்னதாக கிறிஸ் கெயில் 151 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
மேலும், RCB அணிக்காக இதுவரை 300 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் உள்பட 8,509 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 8500 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
62வது அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்துள்ள டேவிட் வார்னரின் (62 அரைசதம்) சாதனையையும் சமன் செய்துள்ளார்.