இன்னும் 6 ரன்கள் மட்டும் தான் - மாபெரும் சாதனைப் படைக்கவுள்ள விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது. இதில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே முதன்முறையாக கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் விளையாடவுள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்க காத்துள்ளார்.
அவர் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இச்சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.