தோனியை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனைப் படைத்த விராட் கோலி...!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகி மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்திய அணி சார்பில் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சனின் வீசிய பந்தில் அவர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த கேப்டன் என்ற பெயரை கோலி பெற்றிருக்கிறார்.
கேப்டனாக இதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளில் 9 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். இந்த பட்டியலில் தோனி 8 டக் அவுட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.