“எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு...” - கோலியின் பதவி பறிப்பு குறித்து கேள்வி எழுப்பும் பயிற்சியாளர்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தவர்.
உலககோப்பை டி20 தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து, கோலியின் கேப்டன்சியை பறித்தது தொடர்பாக கோலியின் சிறுவயது பேட்டிங் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில்,
' நான் விராட்கோலியிடம் இதுவரை பேசவில்லை. சில காரணங்களால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அவர் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதே, தேர்வாளர்கள் உடனடியாக வெள்ளை நிற பந்துகளில் ஆடும் இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகச் சொல்லியிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் விலக்கியிருக்கக் கூடாது. சவுரவ் கங்குலி அளித்த அறிக்கையை நான் சமீபத்தில் படித்தேன்.
அதில் அவர்கள் கோலியை டி20 போட்டித்தொடரின் கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவ்வாறு நடந்ததாக எனக்கு நினைவில்லை. அவரது அறிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
இந்த முடிவுக்கான காரணத்தை தேர்வுக்குழு தெரிவிக்கவில்லை. பி.சி.சி.ஐ.க்கு, நிர்வாகத்திற்கு, தேர்வாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதே நமக்கு தெரியவில்லை.
அங்கே அனைத்திலும் வெளிப்படைத் தன்மையும் இல்லை. தெளிவும் இல்லை.' என கூறினார்.