கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு இது தான் காரணம்

Virat Kohli Sanjay Manjrekar captain resigned
By Thahir Jan 16, 2022 05:40 PM GMT
Report

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடத்திற்கும் மேலாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார்.

டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்சி மீது பல விமர்ச்சனங்கள் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

விராட் கோலி இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் விராட் கோலியோ திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.  

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி நாள் வரை ஆக்ரோஷமாகவும், உற்சாகமாகவும் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி வெறும் 24 மணி நேரத்தில் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் கோலியின் இந்த முடிவு குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “இது அனைவருக்கும் நடக்கக்கூடிய பொதுவான விசயமாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அனைத்து வீரர்களும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். டி.20 போட்டிகளுக்கான கேப்டன் மற்றும் ஐபிஎல் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதை போன்று, விராட் கோலியின் இந்த முடிவும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான்.

மூன்று முக்கிய முடிவுகளையும் விராட் கோலி அடுத்தடுத்து வெறும் குறுகிய காலத்திற்கு எடுத்தது கவனிக்கப்பட வேண்டியது.

என்னை பொறுத்தவரையில் விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு கடும் நெருக்கடியும், அச்சுறுத்தலும் இருந்ததால் தான் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பார்.

தன்னை யாரும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என்பதற்காகவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து தானாக விலகியிருப்பார் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.