தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி : பல சாதனைகளை முறியடித்த விராட் கோலி

viratkohli sachintendulkar INDvSA SAvIND rickyponding
By Petchi Avudaiappan Jan 19, 2022 07:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நேற்று நடைபெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்காத காரணத்தால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா வெண் டர் டுசேன்(129* ரன்கள்), கேப்டன் பவுமா(110 ரன்கள்) அதிரடியால்  50 ஓவர்கள்முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது. பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான்(79 ரன்கள்), விராட் கோலி (51 ரன்கள்), ஷர்துல் தாகூர் (50 ரன்கள்) மட்டுமே சிறப்பாக விளையாடினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் 5 அரைசதம் விளாசியுள்ளார். இந்த இன்னிங்ஸ் மூலம் அந்நிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் 5065 ரன்களும், தோனி 4520 ரன்களும் அடித்திருந்தனர். தற்போது அந்த சாதனையை கோலி முறியடித்தார். 

இதேபோல் அந்நிய மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முறியடித்தார். இந்தப் போட்டியில் சதம் அடித்து இருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை கோலி சமன் செய்து இருப்பார். 

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலி, டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.