இமாலய சாதனை செய்ய காத்திருக்கும் விராட் கோலி : ஆனால் நடக்குமா?
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் படைத்திருக்கும் இமாலய சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தகர்க்க அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 3) வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
டி20 தொடரிலும், முதல் டெஸ்டிலும் பங்கேற்காத கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் கலந்து கொள்கிறார். இதன்மூலம் இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி, இமாலய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
33 வயதாகும் விராட் கோலி அனைத்து வடிவ போட்டிகளிலும் இதுவரை 70 சதங்கள் அடித்துள்ளார். இதில் கேப்டனாக எடுக்கப்பட்ட 41 சதங்களும் அடங்கும்.உலகளவில் கேப்டனாக அதிக சதங்கள் எடுத்த வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவரும் கேப்டனாக 41 சதங்கள் எடுத்துள்ளார்.
இருவரும் தற்போது சமநிலையில் இருக்கும் நிலையில் இரண்டாவது டெஸ்டில் சதம் அடிக்கும்பட்சத்தில் உலக அளவில் கேப்டனாக அதிக சதம் எடுத்தவர் என்ற இமாலய சாதனை விராட் கோலி படைப்பார். ஆனால் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏனெனில் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட எடுக்காமல் இருக்கிறார். அவர் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு ஆட்டத்தில் சதம் கண்டிருந்தார். இதனால் இன்றைய போட்டியை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.