ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி - எதிர்பார்ப்புகள் நடக்குமா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ராகுல் டிராவிட்டின் முக்கிய சாதனையை விராட் கோலி முறியடிக்க உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
கேப்டவுன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 2 ஆண்டு கால மோசமான ஃபார்முக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனிடையே கேப்டவுன் டெஸ்ட் போட்டியானது, விராட் கோலியின் சதம் மட்டுமல்லாது, முக்கிய சாதனை ஒன்றுக்கும் காரணமாக அமைய வாய்ப்புள்ளது. அதுவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் சாதனையையே முறியடிக்கலாம். தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட் 2வது இடத்தில் உள்ளார். அவர் 11 போட்டிகளில் 624 ரன்களுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார்.
கேப்டன் விராட் கோலி 611 ரன்களுடன் இருக்கிறார். இதன் காரணமாக நாளை தொடங்கவுள்ள இந்த 3வது டெஸ்ட் போட்டியில் கோலி 14 ரன்கள் அடித்தால் டிராவிட்டின் சாதனையை முறியடித்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடிப்பார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் வகிக்கிறார். சச்சின் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1161 ரன்களை குவித்துள்ளார்.
அதேபோல் மற்றொரு முக்கிய மைல்கல்லையும் விராட் கோலி எட்ட வாய்ப்புள்ளது. கோலி தற்போதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,854 ரன்களை குவித்துள்ளார். அவர் இந்த கேப்டவுன் டெஸ்டில் இன்னும் 146 ரன்களை அடித்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த பட்டியலில் இதற்கு முன்னர் சச்சின், டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லக்ஷ்மண், சேவாக் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.