பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி..அவர்களை எளிதாக எண்ணிவிட முடியாது - பின்வாங்கும் விராட் கோலி

Virat Kohli Babar Azam India Vs Pakistan
By Thahir Oct 24, 2021 10:34 AM GMT
Report

சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும்.

பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சிவசப்படுவார்கள். அதுவும் இது உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

இந்த உலக கோப்பையுடன் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை விட்டு விலகும் விராட் கோலி, உலக கோப்பை கனவை நனவாக்கும் முனைப்புடன் தனது முதல் சவாலை இன்று தொடங்குகிறார்.

இன்றைய போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது; "பாகிஸ்தான் மிகவும் வலுவான அணியாகும்.

அவர்களை எளிதாக எண்ணிவிட முடியாது. அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ஒவ்வொரு முறையும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.

ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர். எனவே போட்டியில் வெற்றி பெறுவதற்கு நிச்சயம் மிக உயரிய ஆட்டத்தை களத்தில் காட்ட வேண்டும்.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2 ஓவர் பந்து வீசுவதற்கு ஏற்ப உடல்தகுதியை மேம்படுத்தி இருக்கிறார். அவர் பந்து வீசுவதற்கு தயாராகும் வரை அணியில் பகுதிநேர பந்துவீச்சுக்கு சில வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.

6-வது வரிசை பேட்டிங்கில் பாண்ட்யா எவ்வளவு முக்கியமானவர் என்பதை அறிவோம். அந்த வரிசைக்கு அவரை போன்று பங்களிப்பு அளிக்கக்கூடிய வீரரை ஒரே நாள் இரவில் உருவாக்கி விட முடியாது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் போது உலககோப்பை போட்டிக்கான ஆடுகளங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். போக போக, இந்த தொடரில் பனியின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும்" என்று விராட் கோலி கூறினார்.