கவுன்சிலர்கள் கட்சி மாறினால் வெட்டுவேன் - பகிரங்கமாக மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர்
அதிமுகவில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன் என்று சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் என 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதனிடையே விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும் என தெரிவிக்க மற்ற பிரமுகர்களும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும் என்றும் அவர் அதிரடியாக பேச அந்த இடமே அதிர்ந்தது. மேலும் இதனால் என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.