மீண்டும் மணிப்பூரில் வெடித்த வன்முறை - 24 மணி நேரத்தில் 6 பேர் இறப்பு
சில நாட்களாக ஓய்ந்திருந்த மணிப்பூர் கலவரம் தற்போது மீண்டும் துவங்கிய நிலையில், 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் கலவரம்
குக்கி மற்றும் மைத்தி மக்களுக்கு இடையே உண்டான மோதல், 3 மாதங்களை கடந்து தற்போது தொடர்ந்து வருகின்றது. சில நாட்களாக இந்த மோதல் போக்கு அடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மாநிலத்தில் கலவரம் வெடித்துள்ளது.
நேற்று அதிகாலையில் இருந்து பிஷ்ணுபூர்-சுராசந்த்பூர் எல்லைப் பகுதிகளில் ஒரு நாளாக நீடித்த தாக்குதல்களில் சுமார் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோந்து பணியில் ராணுவத்தினர்
இந்த மோதல் போக்கை தடுக்க துணை ராணுவ படையினர் மணிப்பூர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும், தற்போது வரை நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
இதன் காரணமாக பிஷ்ணுபூர் பகுதிகள் முழுமையாக முடங்கிப்போயுள்ளன. நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.