அர்ஜென்டினாவின் வெற்றி கொண்டாட்டம் - கேரளாவில் பல பகுதிகளில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு...!
கேரளாவில் பல பகுதிகளில் வன்முறையாக மாறிய அர்ஜென்டினாவின் வெற்றி கொண்டாட்டத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் பல பகுதிகளில் வன்முறை
லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடினர். ஆனால், கேரளாவில் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. அர்ஜென்டினாவின் வெற்றிக்கான சண்டை 2 உயிர்களை பறித்துள்ளது. அர்ஜென்டினாவை லியோனல் மெஸ்ஸி வெற்றிபெறச் செய்த உடனேயே கேரளா முழுவதும் பல மோதல்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.
17 வயது சிறுவன் மரணம்
நேற்று அர்ஜென்டினா வெற்றிக்குப் பிறகு, கேரள, கொல்லம் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் 17 வயதான அக்ஷய் என்ற சிறுவன் கலந்து கொண்டான். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி அக்ஷய் மயங்கி கீழே சரிந்தான். உடனடியாக அங்கிருந்தவர்கள் அச்சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அக்ஷய் வரும்வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வன்முறையில் ஒருவர் கவலைக்கிடம்
அதேபோல், கேரளா, கண்ணூரில் ரசிகர்கள் அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கொண்டாட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டதில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
6 பேர் கைது - ஒருவர் மரணம்
கேரளாவில் அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு போலீஸ்காரர் லயோனல் மெஸ்ஸி ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளார். வன்முறையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.