தேர்தல் விதிமுறை மீறல்- ஏடிஎம் மையத்திற்கு கொண்டு சென்ற ரூ.3 கோடியே 67 லட்சம் பறிமுதல்
வேலூரில் ஏ.டி.எம் மையங்களுக்கு முன் அனுமதி பெறாமல் எடுத்துச்சென்ற ரூ. 3 கோடியே 67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வங்கியிலிருந்து வேறு வங்கிகோ அல்லது ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப எடுத்துச் செல்ல தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதியை பெற வேண்டும்.
ஆனால் வேலூரில் உள்ள ஒரு சில வங்கிகள் முன்னனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு இன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, கரூர் வைஸ்யா பேங்க் ஆகிய வங்கிகள் மூலம் 4 வண்டிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப கொண்டு சென்ற சுமார் 3 கோடியே 67 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனையடுத்து, வங்கி சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேலூர் கோட்டாட்சியர் கணேஷிடம் உரிய அனுமதி பெற்று, பின்னர் ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பலாம் என அனுமதி வாங்கிய பிறகு, வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் அவர்களின் வாகனங்களை மீண்டும் வங்கிகளுக்கு எடுத்துச் சென்றனர்.