ஆப்கானிஸ்தான் மக்களை கைவிடமுடியாது - ஐநா திட்டவட்டம்
ஆப்கானிஸ்தான் மக்களை கைவிடமுடியாது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்து வரும் நாள்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும், ஆப்கானிஸ்தானில் நடப்பவைகளை உலகம் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமைமீறல் கவலை அளிக்கிறது என தெரிவித்த அன்டோனியோ குட்டரெஸ் ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட முடியாது என தெரிவித்துள்ளார்.